

கும்பகோணம் அருகே கேரம் விளையாட்டின்போது மீண்டும் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பையும் விலக்கி விடச் சென்றவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த வலையபேட்டை மாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர் (55). இவர் கீரை வியாபாரம் செய்து வந்தார். இவரது மைத்துனர் மணியின் மகன்கள் அபினேஷ், அஜய் ஆகியோர் கடந்த 18-ம் தேதி வீட்டின் அருகே கேரம் போர்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அருண் (25) என்பவர், மது அருந்திவிட்டு கேரம் விளையாடும் இடத்துக்கு வந்தபோது, அபினேஷ் அவரை இங்கு வரக்கூடாது எனக் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அருண், அபினேஷ் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த அபினேஷ் உள்ளிட்டவர்களை அடித்துத் தாக்கியுள்ளார்.
இதையடுத்து, நேற்று (மே 19) மாலை அபினேஷ் உறவினர்கள் ரகுபதி, கிருஷ்ணமூர்த்தி, அருள் ஆகியோர் இந்தத் தகராறு தொடர்பாக பேசிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும், அங்கு வந்த அருண் அங்கிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதில் அபினேஷ் தரப்புக்கும், அருண் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அருண், அவரது தந்தை சவுந்தர்ராஜன், தாய் ருக்மணி, உறவினர்கள் சுரேஷ், பாலாஜி ஆகியோர் சேர்ந்து அபினேஷ் தரப்பினரைத் தாக்கினர்.
அப்போது இரு தரப்பினரையும் பன்னீர் விலக்கி விட வந்தார். அப்போது அருண் தரப்பினர் அரிவாளால் வெட்டியதில் பன்னீர் பலத்த காயமடைந்தார், உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பன்னீரை அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து ரகுபதி கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து அருண் உள்ளிட்ட 5 பேரைத் தேடி வருகின்றனர்.