கோவையில் மீண்டும் தலைதூக்கும் குற்றங்கள்: மதுக்கடை திறப்பும் மன அழுத்தமும் காரணமா?

கோவையில் மீண்டும் தலைதூக்கும் குற்றங்கள்: மதுக்கடை திறப்பும் மன அழுத்தமும் காரணமா?
Updated on
2 min read

நான்காம் கட்டப் பொது முடக்கத்தில் மத்திய - மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளைச் செய்திருக்கும் நிலையில், தமிழகத்தில் மக்கள் நடமாட்டம் சற்றே அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், கோவையில் பல இடங்களில் கொலை, அடிதடி, கத்திக்குத்து என்று பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

கோவை சிங்காநல்லூரில் வசித்துவந்த கட்டிடத் தொழிலாளியான சித்திரைவேலு நேற்று அடித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது அண்ணன் மனைவியுடன் சித்திரைவேலு கூடா நட்பு கொண்டிருந்ததுதான் கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

அவிநாசி, சின்னேரிபாளையம் பகுதியில் நடந்த கிரிக்கெட் தகராறில் கொண்டாள் என்ற ஒரு பெண் அடித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்படும் சூழல் உருவானதைத் தொடர்ந்து, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், சூலூரை அடுத்துள்ள இருகூர் பிள்ளையார்கோயில் வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவரின் 15 வயது மகனிடம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் குடிபோதையில், சிகரெட் பற்ற வைக்கத் தீப்பெட்டி கேட்டிருக்கிறார். சிறுவன் எடுத்து வர மறுத்துள்ளார். இதில் ஆத்திரமுற்ற மணிகண்டன் பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து சிறுவனின் வயிற்றில் குத்திவிட்டார். சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். மணிகண்டனைப் போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

கோவை குனியமுத்தூர் திருநகர் காலனியைச் சேர்ந்த கோகுல் (வயது 35). இவர் குடும்பத்தாருக்குள் பிரச்சினை ஏற்படவே போலீஸாருக்குப் புகார் சென்றிருக்கிறது. போலீஸ் ஏட்டு வடிவேலன் என்பவர் விசாரிப்பதற்காக கோகுலின் வீட்டிற்குச் சென்றுள்ளார். விசாரணையின்போது தன்னை கோகுல் தாக்கியதாக ஏட்டு வடிவேலன் புகார் செய்ய, கோகுல் கைது செய்யப்பட்டார்.

கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 32). கூலித் தொழிலாளியான இவர், தனது நண்பர்கள் பிரபாகரன், சந்தோஷ்குமார், மாதேஷ், நந்தகுமார், கிருஷ்ணமூர்த்தி, பிருத்திவிராஜ் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியிருக்கிறார். தொடர்ந்து சாலையில் நின்று அரட்டை அடித்துள்ளனர். அப்போது வாட்ஸ் அப்பில் புகைப்படம் போடுவது சம்பந்தமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் அய்யப்பனின் வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை ஆலாந்துறை இருட்டுப்பள்ளம் அருகே சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட வனத்துறை ஊழியர் நடராஜ் என்பவரைக் கல்கொத்திப்பதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் கத்தியால் குத்தியதாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். குடிபோதையில் தன் கிராமத்துக்குச் செல்ல வழிவிடுமாறு வன ஊழியர்களிடம் தகராறு செய்ததாகவும், இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவங்கள் குறித்து கோவை போலீஸாரிடம் பேசியபோது, “ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 50 நாட்களில் சட்டம், ஒழுங்கு கட்டுக்குள் இருந்தது. நாங்கள் கரோனா பாதுகாப்புப் பணியில் தீவிரமாக இருந்தோம். இப்போது இரண்டு நாட்களாகத்தான் பழையபடி குற்றச் சம்பவங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. நீண்ட நாட்கள் கழித்து மதுக்கடைகள் திறந்திருப்பதும் இதற்கு ஒரு காரணம். இன்னொரு பக்கம், வீட்டில் முடங்கியிருக்கும் மனிதர்கள் அமைதியற்றுக் காணப்படுகிறார்கள். இதுவும் கவனிக்க வேண்டிய விஷயம்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in