புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் பிடிக்கச் சென்றபோது பாலியல் வன்கொடுமை: பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே ஒரு கிராமத்தில் ஊற்று தோண்டி தண்ணீர் எடுக்கச் சென்றபோது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி இன்று உயிரிழந்தார்.
கந்தர்வக்கோட்டை அருகே குடிநீர் பிடித்து வருவதற்காக 13 வயதுச் சிறுமி ஒருவர் குடத்துடன் நேற்று (மே 18) சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் தேடிச் சென்றுள்ளனர். அப்போது, குடிநீர் எடுக்கச் செல்லும் வழியில் உள்ள யூக்கலிப்டஸ் காட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
பின்னர், ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி இன்று (மே 19) உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.வி.அருண்சக்திகுமார் உத்தரவின்பேரில் 4 தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர், கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
