

தூத்துக்குடியில் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடையில் இருந்த ரூ.13 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்களை திருடி சட்டவிரோதமாக விற்பனை செய்த கடையின் மேற்பார்வையாளர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் கரோனா ஊரடங்கை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மார்ச் 24-ம் தேதி முதல் மூடப்பட்டன.
சுமார் 44 நாட்களுக்கு பிறகு சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் நேற்று (மே 7) திறக்கப்பட்டன. அதுபோல தூத்துக்குடி கல்லூரி நகரில் உள்ள டாஸ்மாக் கடையும் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.
இந்த கடையில் உள்ள மதுபான பாட்டில்கள் இருப்பு குறித்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சுமார் ரூ.13.10 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் காணாமல் போயிருந்தன. இதையடுத்து டாஸ்மாக் நிறுவன உதவி மேலாளர் (கணக்கு) வ.சுபியருண் (29) சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த கடையின் மேற்பார்வையாளரான, தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த வே.சண்முகராஜா (53) என்பவர், அந்த பகுதியில் உள்ள பார் உரிமையாளருடன் சேர்ந்து மதுபான பாட்டில்களை திருடி சட்ட விரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து சண்முகராஜா மற்றும் பார் உரிமையாளரான தூத்துக்குடி கேவிகே நகரை சேர்ந்த சி.சேகர் (42) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், சேகரின் உறவினரான அண்ணாநகரை சேர்ந்த அந்தோணிராஜ் என்பரை தேடி வருகின்றனர்.