

போலி ஆதார் கார்டு தயாரித்த வழக்கில் மதுரையில் கைதான வெளிநாட்டுப் பெண்ணை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்த மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் நைமோவா ஜெசிமா (22). இவர் கடந்தாண்டு ஜனவரியில் சுற்றுலா விசா மூலம் இந்தியாவுக்கு வந்தார். விசா காலம் முடிந்த பிறகு மதுரையில் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் போலி ஆதார் அட்டை தயாரித்த வழக்கில் நைமோவா ஜெசிமாவை மதுரை திடீர் நகர் போலீஸார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அவர் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி நசீமாபானு விசாரித்தார். மனுதாரர் 60 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மனுதாரர் 8 வாரத்துக்கு பிறகு விசாரணை நீதின்றத்தில் ஆஜராக வேண்டும். அவரை சென்னை கரோனா தடுப்பு சிறப்பு முகாமில் தங்க வைத்து கரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.