Published : 02 May 2020 05:15 PM
Last Updated : 02 May 2020 05:15 PM

ஊரடங்கு பாதுகாப்பை மீறி நூதனக் குற்றம்; பிரபல ஆன்லைன் உணவு நிறுவன சப்ளையர் போர்வையில் கஞ்சா விற்பனை: சென்னை இளைஞர் கைது 

சென்னை பட்டினப்பாக்கத்தில் ஆன்லைன் உணவு சப்ளை நிறுவனத்தின் பெயரில் கஞ்சா சப்ளை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னை பெருங்குடியில் வசித்து வருபவர் குணசேகரன் (25). கரோனா தொற்று ஊரடங்கு மற்றவர்களைப் பாதித்ததுபோல் இவரையும் பாதித்துள்ளது. கடந்த ஒரு வருடமாக பிரபல தனியார் உணவு சப்ளை நிறுவனத்தில் டெலிவரி நபராக வேலை பார்த்து வந்தார்.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வேலைக்குச் செல்லாமல் இருந்தார். வருமானத்துக்கு வழி தேடிய இவர் பெருங்குடியில் தனக்குத் தெரிந்த நபரிடம் கஞ்சாவை வாங்கி வந்து அடையாறு, மந்தைவெளி, மயிலாப்பூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

வண்டியில் தான் ஏற்கெனவே வேலை செய்த பிரபல நிறுவனத்தின் பையில் கஞ்சாவை வைத்துக்கொண்டு விற்பனை செய்து வந்துள்ளார். போலீஸாரும் இவர் உணவு சப்ளைக்காகச் செல்கிறார் என சோதனையிடாமல் அனுமதித்துள்ளனர். இது அவருக்குச் சாதகமாக அமைந்ததால் தொடர்ந்து நிறுவனப் பெயரில் உணவு சப்ளை செய்வது போன்று கஞ்சா விற்று காசு பார்த்துள்ளார்.

தங்கள் பகுதிகளில் பிரபல உணவு நிறுவன சப்ளை பையுடன் வந்து ஒரு நபர் கஞ்சா சப்ளை செய்வதாக போலீஸாருக்குப் புகார் சென்றது. இதனையடுத்து மயிலாப்பூர் உதவி ஆணையரின் தனிப்படையினர் அடையாற்றில் உள்ள வண்ணாந்துறை அருகே விற்பனை செய்து கொண்டு இருந்த குணசேகரனை மடக்கிப் பிடித்து அவரிடம் இருந்த கஞ்சாவைக் கைப்பற்றினர்.

பின்னர் அவரை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் போலீஸார் ஒப்படைத்தனர். அவர் மீது போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் குறைந்த அளவே கஞ்சாவுடன் பிடிபட்டதால் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x