

சென்னையில் பெண்களிடம் பழகி மோசடியில் ஈடுபட்ட நாகர்கோவில் இளைஞரின் வீட்டை சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள நோட்டீஸ் வழங்கினர்.
நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த தங்கபாண்டியனின் மகன் காசி என்ற சுஜி சென்னையில் பெண்களிடம் பழகி காதலிப்பது போன்று நடித்து பணம், மற்றும் நகைகளைப் பறித்து மோசடியில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரை தொடர்ந்து காசியின் லீலைகள் வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது. அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காசியின் மோசடி தொடர்பாக பெண்கள் தொடர் புகார்கள் அளித்த வண்ணம் உள்ளனர். நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேயிடம் மாதர் சங்கத்தினரும் புகார் அளித்துள்ளனர். அதில், காசி பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து மிரட்டி பணம் பறித்த வழக்கை மத்திய புலனாய்வு பிரிவிற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
காசி இதற்கு முன்பு பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த விவரங்கள், மற்றும் ஆதாரங்களை அவரது வீட்டில் இருந்து கைப்பற்றிய லேப்டாப், ஹார்டு டிஸ்க் போன்றவற்றில் இருந்த படங்கள், மற்றும் வீடியோ மூலம் தனிப்படை போலீஸார் திரட்டி வருகின்றனர். காசியின் நண்பர், உறவினர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே நாகர்கோவில் கணேசபுரத்தில் உள்ள 4 மாடி கொண்ட காசியின் வீடு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதும், தரைத்தளம், முதலாவது மாடி தவிர, பிற 3 மாடிகளும் அனுமதியின்றி கட்டப்பட்டிருப்பதும் உள்ளூர் திட்ட குழுமம், மற்றும் மாநகராட்சி ஆய்வின்போது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து காசியின் வீட்டை மாநகராட்சியினர் அளவீடு செய்தனர். பின்னர் காசியின் தந்தை தங்கபாண்டியனுக்கு, வீட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி சீல் வைப்பதற்கான நோட்டீஸ் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டுள்ளது.