

தூத்துக்குடியில் கரோனா பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விசாரணைக் கைதி போலீஸாரை ஏமாற்றிவிட்டு தப்பியோடினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி சித்திரை தெருவைச் சேர்ந்தவர் த.நாகராஜன் (49). இவரது வீட்டில் பீரோவை உடைத்து நகை, பணத்தை திருட முயன்றதாக ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தை சேர்ந்த சுடலை மகன் மாயாண்டி (29) என்பரை ஆழ்வார்திருநகரி போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.
இவர் மீது மேலும் சில திருட்டு வழக்குகள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அவரை சிறையில் அடைக்க ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைப்பதற்காக காவலர்கள் ஜவஹர், குணசுந்தர் ஆகியோர் அழைத்துச் சென்றனர்.
சிறைக்குள் அடைக்கும் முன்னர், மாயாண்டிக்கு கரோனா பாதிப்பு இல்லை என்று மருத்துவ சான்றிதழ் பெற்று வருமாறு சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து மாயாண்டியை போலீஸார் மருத்துவ பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனைக்காக கைவிலங்கு அகற்றப்பட்ட மாயாண்டி, கரோனா வார்டில் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மாயாண்டியை தேடி வருகின்றனர்.