

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கள்ளச் சாராய ஊறல் மற்றும் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
ஊரடங்கு காரணமாக அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு உள்ளதால் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் சட்டவிரோதமாக மது விற்பதும் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சேத்தூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. கள்ளச்சாராயம் காய்ச்சியதாக பலர் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.
இந்நிலையில், ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான சாஸ்தா கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான தோப்பில் சட்டவி ரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக சேத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து குறிப்பிட்ட பகுதியில் சேத்தூர் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டபோது தென்னந்தோப்பில் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் நாட்டுத் துப்பாக்கியும் தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அதிர்ச்சி அடைந்த போலீசார் இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த அய்யர் என்பவரை கைது செய்தனர்.
மேலும் அங்கிருந்த 100 லிட்டர் சாராய ஊழலையும் நாட்டுத் துப்பாக்கி மற்றும் 17 தோட்டாக்களையும் சேத்தூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.