Last Updated : 27 Apr, 2020 04:11 PM

 

Published : 27 Apr 2020 04:11 PM
Last Updated : 27 Apr 2020 04:11 PM

பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞருக்கு அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பா?- பறிமுதல் செய்யப்பட்ட ஹார்ட் டிஸ்க் மூலம் போலீஸார் விசாரணை

சென்னையில் பணக்கார பெண்களிடம் பழகி அவர்களிடம் இருந்து பணம் பறித்த நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞருக்கு அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு உள்ளதா? என அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஹார்ட் டிஸ்க் மூலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த தங்கபாண்டியனின் மகன் காசி என்ற சுஜி(26). இவர் பேஸ்புக், இன்ஸ்டகிராமில் பல போலியான கணக்குகளை தொடங்கி அதன் மூலம் பணக்காரப் பெண்களையும், பட்டதாரிப் பெண்களையும் குறிவைத்து பழகி வந்துள்ளார்.

சென்னையில் தங்கியிருந்த அவர் அங்கு பெண் டாக்டர் உட்பட பல பெண்களுடன் பழகி அவர்களுக்குத் தெரியாமலேயே ஆபாசமாக படம் எடுத்து அவற்றை இணையத்தளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இது தொடர்பாக சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரை தொடர்ந்து காசியின் மோசடி நாடகம் வெட்டவெளிச்சம் ஆனது.

கோட்டாறு போலீஸார் காசியை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பெண்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது. அவரை போலீஸார் நாங்குநேரி சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை காசி காதலிப்பது போன்று நடித்து பணம் பறித்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காசி பாலியல் ரீதியாக துன்புறுத்தி மிரட்டியது குறித்தும், இதைப்போன்று வேறு நபர்கள் மிரட்டியிருந்தாலோ பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடியாக குமரி காவல்துறையில் புகார் அளிக்கலாம் என எஸ்.பி. ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

மேலும் புகார் அளிக்க தயக்கம் காட்டும் பெண்கள் தனது தனிப்பட்ட செல்பேசி எண்ணான 9498111103 தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரின் பெயர், விவரங்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இதைத்தொடர்ந்து சென்னையில் பணியாற்றும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு பெண் நேற்று இரவு எஸ்.பி. அலுவலகத்திற்க ஆன்லைன் மூலம் புகார் அனுப்பினார். அதில் இரண்டரை வருடமாக தன்னை காதலித்து காசி ஏமாற்றி விட்டதாகவும், தன்னை தவறாக படம் பிடித்து மிரட்டி நகைகளை அபகரித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதைப்போல் சென்னையில் காசியால் ஏமாற்றப்பட்ட பெண்கள் பலர் போலீஸாரிடம் ரகசியமாக புகார் அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேயிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி தலைமையில் அளித்த புகார் மனுவில்; பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவம் போன்ற நிலைப்பாடு காசி சம்பவத்தில் உள்ளதா? என்ற உண்மை நிலையை போலீஸார் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

காசி மீது போக்ஸோ சட்டத்தின் பிரிவையும் உட்படுத்தி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள காசியின் வீட்டில் அவரது லேப்டாப், செல்போன், ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதில் அவர் பழகிய பெண்களில் ஏராளமான படங்கள் இருந்தன. மேலும் காசியின் நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இச்சம்பவத்தில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா? எனவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்; காசி வழக்கில் நடத்தப்பட்ட விசாரணையில், பல பெண்களை ஆசைவார்த்தை கூறி பழகி ஏமாற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்பட்ட காசி, அவர் பழகும் பெண்களை பிற நபர்களுக்கு அறிமுகப்படுத்தாமல் இருப்பதில் கவனமாக இருந்துள்ளார்.

ஆனாலும் இவ்வழக்கில் காசியுடன் ஹார்ட் டிஸ்கில் உள்ள வீடியோ, புகைப்படங்களில் சேர்ந்திருக்கும் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x