20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய தொழில்: சாட்டையை சுழற்றுமா காவல்துறை?

பறிமுதல் செய்த கள்ளச்சாராயத்தை தரையில் கொட்டி அழிக்கும் போலீஸார் | கோப்புப் படம்.
பறிமுதல் செய்த கள்ளச்சாராயத்தை தரையில் கொட்டி அழிக்கும் போலீஸார் | கோப்புப் படம்.
Updated on
1 min read

டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழில் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. இதனை போலீஸார் ஆரம்பத்திலேயே இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் திண்டாடி வருகின்றனர்.

இதனால் சட்டவிரோத மது விற்பனை, டாஸ்மாக் கடைகளை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு, மதுவுக்கு பதிலாக ரசாயனங்களை குடித்தல் போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் ஒருபுறம் இருக்க கள்ளச்சாராய தொழில் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு காலத்தில் கள்ளச்சாராய தொழில் கொடிக்கட்டி பறந்தது. அப்போது, மாவட்டத்தில் எஸ்பியாக இருந்த ஜாங்கிட், ராஜேஷ் தாஸ் ஆகியோரது கடுமையான முயற்சியால் தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராய தொழில் கடந்த 1999-ம் ஆண்டு முற்றிலும் ஒழிக்கப்பட்டது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மாவட்டத்தில் கள்ளச்சாராயத் தொழில் மீண்டும் மெல்ல தலைத்தூக்க தொடங்கியிருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டு, 5 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பல் பிடிப்பட்டதுடன், கள்ளச்சாராயம் தயாரிக்க வைத்திருந்த ஊறல் அழிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 4 பேர் கைது செய்யப்பட்டு, சுமார் 200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கள்ளச்சாராயம் காய்ச்சும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள மது தேவையை பயன்படுத்தி சிலர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை ஆரம்பத்திலேயே தடுத்து ஒழிக்க வேண்டும். இல்லையெனில் தென்மாவட்டங்களில் மீண்டும் சாதி மோதல்கள் போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தலைக்தூக்கும் அபாயம் உள்ளது.

எனவே, கள்ளச்சாராயத்தை ஒழிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை உடனடியாக எடுத்தாக வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in