

குளித்தலை அருகே முன்விரோதத்தில் பால்காரர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, குளித்தலை போலீஸார் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள தெற்குமாடுவிழுந்தான்பாறையைச் சேர்ந்தவர் அன்பழகன் (28), பால்காரர். இன்று (ஏப்.21) அதிகாலை இருசக்கர வாகனத்தில் பால் கறவைக்குச் சென்றபோது நச்சலூர் அருகேயுள்ள சொட்டல் என்ற இடத்தில், 4 பேர் கொண்ட கும்பல் அன்பழகனை அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்துத் தகவலறிந்த குளித்தலை டிஎஸ்பி கும்மராஜா மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் சொட்டல் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் (19), குமார் (19), வினோத் (18) ஆகியோர் கடந்த சில வாரங்களுக்கு முன் குடிபோதையில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே சென்ற அன்பழகனுக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அன்பழகன் தெரிந்தவர்கள் சிலருடன் கதிரேசன் தந்தை பனையடியானை சந்தித்து முறையிட்டுள்ளார். அப்போது அன்பழகன் பனையடியானை குச்சியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கதிரேசன், குமார், வினோத் மற்றும் நச்சலூரை சேர்ந்த ராஜேஷ் (23) ஆகியோருடன் சேர்ந்து அன்பழகனை அரிவாளால் வெட்டிக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுதது மேற்கண்ட 4 பேரை குளித்தலை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.