

தேனி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சும் நிலை அதிகரித்து வருகிறது. எனவே கருப்பட்டி, கடுக்காய், வெல்லம் உள்ளிட்ட மூலப்பொருள் விற்பனைக்கு போலீஸார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
கடந்த மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதை உணர்ந்து பலரும் முன்னதாகவே டாஸ்மாக் கடைகளில் பல லட்சம் அளவிற்கு மதுவகைகளை கொள்முதல் செய்து கள்ளமார்க்கெட்டில் விற்கத் துவங்கினர்.
தற்போது இதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல இடங்களிலும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.
கடந்த 10 நாட்களுக்குள் கடமலைக்குண்டு அருகே சிறப்பாறையில் 6 பேரும், கருப்பையாபுரத்தில் 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.
நேற்று முன்தினம் போடி வெண்ணிலைத்தோப்பு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 4பேர் அதை டிக்டாக் செயலில் வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதுடன் டூவீலர், மொபைல் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.
கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க இதற்கான மூலப் பொருள் விற்பனைக்கு போலீஸார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
இதன்படி கருப்பட்டி, வெல்லம், கடுக்காய், ஏலம், நவச்சாரக்கட்டி, பழங்கள், போதைக்காக சேர்க்கப்படும் சில வகை ரசாயனப் பொருட்கள், கிராம்பு, மண்பானைகள், விறகு உள்ளிட்ட பல பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது.
யாராவது வாங்கினால் உடன் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வியாபாரிகளிடம் போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.