

டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களை திருடும் சம்பவம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து கடைகளில் உள்ள அனைத்து மதுபான பாட்டில்களையும் குடோன்களுக்கு மாற்ற டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்பேரில் பெரும்பாலான கடைகளில் இருந்து மதுபான பாட்டில்கள் குடோன்களுக்கு மாற்றப்பட்டுவிட்டன.
கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 14-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது மேலும் நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகத்தில் உள்ள 5,500 டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், தனியார் ஹோட்டல் பார்களும் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
இதனால் மதுபான பிரியர்கள் கடுமையாக திண்டாடி வருகின்றனர். இதனை பயன்படுத்தி சட்டவிரோத மது விற்பனைகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
மேலும், டாஸ்மாக் மதுபான கடைகளை உடைத்து மதுபான பாட்டில்களை திருடிச் செல்லும் சம்பவங்களும் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.
பெரும்பாலான டாஸ்மாக் மதுபான கடைகள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இருப்பதால், அவைகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் இருக்கும் அனைத்து மதுபான பாட்டில்களையும் குடோன்களுக்கு மாற்ற டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கடந்த இரு தினங்களாக கடைகளில் இருந்து மதுபான பாட்டில்களை குடோன்களுக்கு மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான கடைகளில் இருந்து மதுபான பாட்டிகள் குடோன்களுக்கு மாற்றப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.