

கரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் உட்கோட்டத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விற்பனை தங்கு தடையுமின்றி நடைபெற்று வருவதாக பல்வேறு தரப்பிலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார்கள் சென்றன.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா தலைமையிலான தனிப்படை கோவில்பட்டி உட் கோட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் விவசாய நிலங்களிலும் சாலையோரங்களிலும் பதுங்கு குழிகள் அமைத்து டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை ஜோராக நடைபெற்று வருவதாக கிடைத்தது.
இதையடுத்து, உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா தலைமையிலான போலீஸார் அப்பகுதிக்கு விரைந்து சென்று முகாமிட்டு கண்காணித்து வந்தனர். அப்போது பதுங்கு குழிகளுக்குள் பதுக்கி வைத்து மதுபானங்கள் விற்பனையில் ஈடுபட்ட நபரை கையும் களவுமாக பிடித்து அவரிடம் இருந்து 500-க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த ராஜா (40) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், நாலாட்டின் புதூரில் குழிகளுக்குள் பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதை தனிப்படை போலீஸார் வீடியோ பதிவு செய்தது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஏற்கெனவே கடந்த வாரம் கயத்தாறு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 4 ஆயிரம் டாஸ்மாக் மதுபான பாட்டில்களை உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான தனிப்படை கைப்பற்றியது குறிப்பிடதக்கது.
இதனால் போலீஸ் உயர் அதிகாரிகள் கடும் அதிர்ச்சியும் விரக்தியும் அடைந்துள்ளனர்.