தூத்துக்குடியில் துறைமுக ஊழியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை: தாளமுத்து நகர் போலீஸார் விசாரணை

தூத்துக்குடியில் துறைமுக ஊழியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை: தாளமுத்து நகர் போலீஸார் விசாரணை
Updated on
1 min read

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள பெரியசெல்வம் நகரில் வசித்து வருபவர் வின்சென்ட், துறைமுக ஊழியர். இவர் தன்னுடைய மனைவி ஜான்சி மற்றும் குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு உணவிற்குப் பிறகு வின்சென்ட்டும், அவருடைய மனைவி ஜான்சியும் வீட்டின் அனைத்து அறை கதவுகளையும் பூட்டிவிட்டு வழக்கமாக தாங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்க சென்று விட்டனர்.

இந்நிலையில் இன்று காலையில் ஜான்சி எழுந்து வந்த பார்த்தபோது வீட்டில் பீரோ இருந்த அறை கதவு திறந்து கிடந்துள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்ததில் பீரோ திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த பொருள்கள் அனைத்தும் கீழே சிதறிக் கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 100 பவுன் நகை, 20 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து தூத்துக்குடி தாளமுத்து நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் போலீஸ் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதில் மோப்பநாய் மோப்பம்பிடித்தப்படி சிறிது தூரம் சென்று விட்டு நின்றுவிட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

இது குறித்து ஜான்சி அளித்த புகாரின் பெயரில் தாளமுத்து நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் அடர்த்தி மிகுந்த குடியிருப்புகள் பகுதிக்குள் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in