

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக ரூ.605 கோடி மதிப்பில் கப்பலில் கடத்தப்பட்ட டன் கணக்கான போதைப் பொருட்களை பறிமுதல் செய்து பாகிஸ்தானைச் சார்ந்த 9 பேரை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இலங்கை கடற்படை செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்ந்து சர்வதேச கடற்பகுதியில் போதைப்பொருட்களை ஏற்றிச் செல்லும் படகுகள் மற்றும் கப்பல்கள் பற்றி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்து கப்பலான சயுர கொழும்பிலிருந்து சுமார் 800 கி.மீ தொலைவில் இந்தியப் பெருங்கடலில் கொடி இல்லாமல் பயணித்த வெளிநாட்டு கப்பலை கண்டறிந்து அந்த கப்பலை சோதனையிட்டது.
கடற்படையினரின் சோதனையில் கப்பலில் மெத்தம்ஃபெட்டமைன் போதைப்பொருள் 605 கிலோ, கெடமைன் போதைப்பொருள் 579 கிலோ, 200 பாக்கெட் பாபுல் போதைமருந்து மற்றும் அடையாளம் காணப்படாத 100 கிராம் போதை மாத்திரைகள் ஆகியவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
கொழும்பு அருகே உள்ள திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு பறிமுதல் செய்யப்பட்ட கப்பலும் போதைப் பொருட்களும் புதன்கிழமை மாலை கொண்டு வரப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு மட்டும் ரூ 605 கோடி என்று கணக்கிடப்படப்பட்டுள்ளது. மேலும் கப்பலில் இருந்த 9 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கை வரலாற்றில் ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்ளில் மிகப்பெரிய எண்ணிக்கை இதுவாகும்.
எஸ். முஹம்மது ராஃபி