

போடியில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞரால் தாக்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்தார்.
அண்மையில் இலங்கையிலிருந்து போடிக்கு வந்த இளைஞர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அவருக்கு சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து ஆலோசனை வழங்கி வந்தனர்.
வீட்டிலேயே முடங்கியிருந்த நிலையில் திடீரென நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை வீட்டிலிருந்து தப்பி வெளியே வந்தார்.
பின்னர் தனது ஆடைகளைக் களைந்து பித்துபிடித்தவர் போல் நிர்வாணமாக சாலையில் ஓடியுள்ளார். அருகில் உள்ள பக்தசேவா தெருவிற்குள் ஓடிய அவர் வீட்டின் முன் படுத்திருந்த நாச்சியம்மாள் (90) என்ற மூதாட்டியின் கழுத்தைக் கடித்துள்ளார்.
மூதாட்டியின் அலறலைக் கேட்ட பொதுமக்கள் இளைஞரிடமிருந்து மூதாட்டியை மீட்க முயன்று முடியாததால் அவரைத் தாக்கி மீட்டனர்.
இதில் மூதாட்டியின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மூதாட்டி 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவ கல்லூரி மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பொதுமக்கள் அந்த இளைஞரின் கை, கால்களில் கயிற்றால் கட்டி வைத்துவிட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் மணிகண்டனை மீட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டவர் என்பதால் போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இளைஞரால் தாக்கப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனினிறி இன்று (சனிக்கிழமை) உயிரிழந்தார்.