

உலகையே அஞ்சத்தில் உறைய வைத்திருக்கும் கோரானா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்களை காப்பாற்றிக் கொள்ள மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகின்றன.
அதில் முதல் தற்காப்பாக பொதுமக்கள் தங்கள் கைகளை சுத்தமாக வைத்திருக்க கிருமி நாசினி (hand sanitiser) உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், சானிட்டைசரின் தேவை நாடு முழுவதும் அதிகமாகியுள்ளது. பல இடங்களில் சானிட்டைசர்கள் கிடைக்கவும் இல்லை.
இந்நிலையில், தூத்துக்குடி கிராமம், முத்தம்மாள் காலனி 5-வது தெருவில் போலியாக கிருமி நாசினி (hand sanitiser), டாய்லெட் கிளீனர், தரை துடைப்பான், டிஸ்வாஷ் தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு வருவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், மாவட்ட நியமன அலுவலர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மாரியப்பன் தலைமையில் தூத்துக்குடி வட்டாச்சியர் செல்வக்குமார் மற்றும் சிப்காட் காவல் ஆய்வாளர் முத்து சப்பிரமணியன் உள்ளிட்டேர் சம்பந்தப்பட்ட முத்தம்மாள் காலனி 5 வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஆய்வு செய்தனர்.
அங்கு போலியாக கிருமி நாசினி, டாய்லெட் கிளீனர், தரை துடைப்பான், டிஸ்வாஷ் தயாரித்துக்கொண்டிருந்த ஓட்டப்பிடாரம் வட்டம் கீழமுடிமன் கிராமத்தைச் சேர்ந்த ஞான கிஷோர் ராஜ் மற்றும் ஜான் பெனடிக்ட் ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்கள் கலப்படம் செய்ய வைத்திருந்த 500 லிட்டர் ஆயிலை கைப்பற்றி சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸாரின் முதற்க்கட்ட விசாரணையில் அரசிடம் உரிய அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக தயார் செய்து கடைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூபாய்.2 லட்சம் ஆகும் எனத் தெரிகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.