Published : 20 Mar 2020 08:48 PM
Last Updated : 20 Mar 2020 08:48 PM

மீண்டும் புளு பனிஷர்-எம்டிஎம்ஏ  கடும் போதை மாத்திரைகள், படிக வடிவ பொடி : சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்

ஐரோப்பாவில் இருந்து இந்தியாவுக்கு போதைப் பொருட்கள் அடங்கிய பார்சல் ஒன்று கடத்தப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விமான சுங்கத் துறையின் அஞ்சலக வேவுத் தகவல் பிரிவினர் மீனம்பாக்கத்தில் உள்ள வெளிநாட்டு அஞ்சல் அலுவலகத்தில் அந்த பார்சலைத் தடுத்து நிறுத்தினர்.

பிரான்ஸ் நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட இந்த பார்சல் பதிவு செய்யப்படாமல் வந்தது. அதனைப் பரிசோதித்ததில் நீலவண்ணத்தில் இருந்த மாத்திரைகள் படிக வடிவ பொடி கொண்ட பிளாஸ்டிக் பைகள் காணப்பட்டன. இவற்றை சோதனையிட்டதில் இவை எம்டிஎம்ஏ போதை மாத்திரைகள் என கண்டறியப்பட்டது.

மொத்தம் 77 கிராம் எடையுள்ள 158 நீல வண்ண மாத்திரைகள் மற்றும் 19 கிராம் எடையுள்ள வெள்ளை நிறப் பொடி ஆகியன போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின்படி பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6.6 லட்சம் ஆகும். இந்த பொருட்கள் உறுதிப்படுத்தும் சோதனைகளுக்கென மத்திய வருவாய் துறை சோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டன.

இந்தப் பார்சல் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள முகவரிக்கு அனுப்பப்பட்டது. அந்த இடத்தில் சென்று பார்த்தபோது அங்கே சில குடிசைகள் தவிர கட்டிடங்கள் ஏதும் இல்லாதது தெரிய வந்தது. இந்த முகவரி 10 ஆண்டுகளுக்கு முன் குடிசை அகற்று வாரியத்தினரால் இடிக்கப்பட்ட கட்டிடம் ஒன்றின் முகவரி என விசாரணையில் தெரிய வந்தது. வெளிநாட்டில் இருந்து பதிவு செய்யப்படாமல் வரும் பார்சல் இல்லாதவொரு முகவரியில் எவ்வாறு விநியோகம் செய்யப்பட்டது என்பது குறித்து புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒரு வார காலத்திற்கு முன்னதாக வெளிநாட்டு அஞ்சலகத்தில் ரூ.30 லட்சம் பெறுமான எம்டிஎம்ஏ மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

இந்த வழக்கு குறித்து மேல் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பு கூறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x