அவிநாசி அருகே லாரி மீது கார் மோதி விபத்து: மருத்துவ மாணவர்கள் 5 பேர், கார் ஓட்டுநர் உயிரிழந்த பரிதாபம்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரை அருகே தனியார் கல்லூரி மருத்துவ மாணவர்கள் காரில் சுற்றுலா சென்றபோது லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 7 பேர் ஊட்டிக்கு காரில் சுற்றுலா சென்றுகொண்டிருந்தனர். அவிநாசி பழங்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று (மார்ச் 19) காலை அவர்கள் காரில் சென்று கொண்டிருந்த போது, முன்னே சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் வந்த 5 மாணவர்களும், கார் ஓட்டுநரும் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ராஜேஷ் (21), சூர்யா (21), வெங்கட் (21), சின்னசேலத்தைச் சேர்நத இளவரசன் (21), வசந்த் (21) ஆகிய 5 மாணவர்கள் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், தருமபுரியை சேர்ந்த சந்தோஷ் (22), சேலத்தைச் சேர்ந்த கார்த்தி (21) ஆகிய இரு மாணவர்கள் காயமடைந்தனர். இவர்கள் முறையே அவிநாசி அரசு மருத்துவமனையிலும், கோவை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
