மர்மமான முறையில் பெண் சிசு மரணம்: சடலத்தைத் தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை

புதைக்கப்பட்ட இடத்திலேயே சடலத்தைத் தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை.
புதைக்கப்பட்ட இடத்திலேயே சடலத்தைத் தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை.
Updated on
1 min read

மர்மமான முறையில் பெண் சிசு உயிரிழந்த சம்பவத்தில் உண்மையைக் கண்டறிய புதைக்கப்பட்ட இடத்திலேயே சடலம் தோண்டியெடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

கரூர் மாவட்டம் போத்துராவுத்தன்பட்டியை அடுத்த வடுகபட்டி கிழக்குமேட்டைச் சேர்ந்தவர் சிவசிங்கபெருமாள் (40). இவர் மனைவி சங்கீதா (29). இந்த தம்பதிக்கு 10 மற்றும் 7 வயதுகளில் இரு பெண் குழந்தைள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இத்தம்பதிக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது.

இக்குழந்தைக்கு கடந்த 14-ம் தேதி உடல்நிலை சரியில்லை என போத்துராவுத்தன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குளித்தலை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் குழந்தை உயிரிழந்து விட்டதாகக்கூறி யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் அவர்களது தோட்டத்தில் கடந்த 14-ம் தேதி சடலத்தைப் புதைத்துவிட்டனர்.

பெண் சிசு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போத்துராவுத்தன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பிரபு தோகைமலை போலீஸில் அன்றைய தினம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர். மேலும், குழந்தையின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், குழந்தையின் சடலத்தைத் தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை செய்வதற்காக தகரத்தில் கூரை அமைத்தனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அன்று பிரேதப் பரிசோதனை நடைபெறவில்லை.

கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் மகாமுனி, தோகைமலை காவல் ஆய்வாளர் முகமது இத்ரிஸ், பெற்றோர் சிவசிங்கபெருமாள், சங்கீதா ஆகியோர் முன்னிலையில் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலம் நேற்று (மார்ச் 16) தோண்டியெடுக்கப்பட்டு அதே இடத்தில் மருத்துவக் குழுவினரால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

ஆய்வுக்காக உடல் உறுப்புகள் சேகரிக்கப்பட்டு குழந்தையின் சடலம் மீண்டும் அதே இடத்தில் புதைக்கப்பட்டது. அகற்றப்பட்ட உறுப்புகள் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டன. பிரேதப் பரிசோதனையின் முடிவில் குழந்தை உடல் நலக்குறைவால் உயிரிழந்ததா? அல்லது வேறு வகையில் உயிரிழப்பு ஏற்பட்டதா? என்பதன் அதனடிப்படையில் போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in