

விருதுநகர் அருகே இன்று காலை வேலைக்கு புறப்பட்டுச் சென்ற கட்டிட தொழிலாளி ஒருவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.
விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணர் பகுதியைச் சேர்ந்தவர் அக்னி ராமன் (34). திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். இவர் மீது ராஜபாளையத்தில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை வீட்டில் இருந்து மதுரைக்கு வேலைக்கு செல்வதற்காக அக்னி ராமன் தனது பைக்கில் புறப்பட்டுச் சென்றார்.
அவர், மல்லாங்கிணர் அருகே வையம்பட்டி பாலம் பகுதியில் சென்றபோது மர்ம நபர்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
தகவலறிந்த மல்லாங்கிணர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அக்னி ராமன் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் கொலையாளிகள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.