

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஜவுளிக்கடை உரிமையாளரை தாக்கிய மூவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இளையான்குடி அருகே சொக்கப்படப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புமணி (30). இவர் சூராணத்தில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த 2014-ம் ஆண்டு சூராணத்தைச் சேர்ந்த கர்ணன் (55) என்பவர் அப்பகுதியில் ஊராட்சித் தலைவராக இருந்துள்ளார். அவரது பணிகளை அன்புமணி குறை கூறி வந்துள்ளார்.
மேலும் அன்புமணிக்கும் மாரந்தையைச் சேர்ந்த சகோதரர்கள் வீரசேகர் (45), முனியாண்டி (35) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் 2014 ஆக.19-ம் தேதி கர்ணன், வீரசேகர், முனியாண்டி ஆகிய மூவரும் அன்புமணியை தாக்கி அவரது காரையும் சேதப்படுத்தினர். இதுகுறித்து சாலைக்கிராமம் போலீஸார் வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு சிவகங்கை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செம்மல் குற்றவாளிகள் மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறையும், தலா ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.