Last Updated : 10 Mar, 2020 03:10 PM

 

Published : 10 Mar 2020 03:10 PM
Last Updated : 10 Mar 2020 03:10 PM

நீதிமன்றத்தில் ஆள் மாறாட்டம்: இன்ஸ்பெக்டர், ஏட்டு மீது வழக்குப் பதிவு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நீதிமன்றத்தில் ஆள் மாறாட்டம் செய்ததாக இன்ஸ்பெக்டர், பெண் ஏட்டு உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளராக வெங்கடாசலபதி பணியாற்றி வருகிறார். கடந்த 3 நாள்களுக்கு முன் குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டியதாக கீழான்மறைநாட்டைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகனும் ராணுவ வீரருமான மாரிச்சாமி என்பவர் மீது மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 185-ன்கீழ் 306-2020 என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சாத்தூரில் உள்ள முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, மாரிச்சாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட நபரிடமிருந்து அபராதத்தொகை பெறப்பட்டு நீதித்துறை நடுவர் கையெழுத்திற்காக ரசீது வைக்கப்பட்டபோது ஏற்கெனவே ரசீதில் பெறப்பட்ட கையெழுத்திற்கும், தற்போது குற்றம் சாட்டப்பட்ட நபரின் கையெழுத்திற்கும், போக்குவரத்துக் காவல் ஆய்வாளரால் தாக்கல் செய்யப்பட்ட ரசீதில் உள்ள கையெழுத்திற்கும் வித்தியாசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட ராணுவ வீரர் மாரிச்சாமி பெயரில் நீதிமன்றத்தில் ஆஜரான நபரை விசாரித்தபோது அவர் மாரிச்சாமியின் சித்தப்பா மகன் வெம்பக்கோட்டை அருகே உள்ள கங்கர்செவல் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (20) என்பது தெரியவந்தது.

மேலும், ஆள்மாறாடம் செய்து குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதத்தைச் செலுத்த தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடாசலபதி மற்றும் பெண் ஏட்டு கணபதி ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்து பேசி முடித்து வழக்கை முடிக்க நீதிமன்றத்தில் சரவணன் ஆஜரானது தெரியவந்தது.

இதுகுறித்து, சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்ற இளநிலை உதவியாளர் பிரகாஷ் புகார் கொடுத்தார்.

அதையடுத்து, ஆள் மாறாட்டம் செய்த சரவணன், அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக காவல் ஆய்வாளர் வெங்கடாசலபதி, பெண் ஏட்டு கணபதி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யாமல், ஆள் மாறாட்டம் செய்து நீதிமன்றத்தில் வேறொருவர் ஆஜரானது மற்றும் இதற்கு உடந்தையாக காவல் ஆய்வாளர், ஏட்டு ஆகியோர் செயல்பட்ட சம்பவம் விருதுநகர் மாவட்ட காவல்துறை மற்றும் நீதித்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x