

ஆம்பூர் அருகே கள்ளநோட்டு அச்சடிக்கும் கும்பலை மகாராஷ்டிரா மற்றும் தமிழக காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.7.55 லட்சம் கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம், சைன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் துறையினர் கடந்த 3-ம் தேதி அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கையில் பையுடன் நின்றிருந்த ஒருவர் காவல் துறையினரைக் கண்டதும் அங்கிருந்து தப்பியோட முயன்றார்.
அவரை காவல் துறையினர் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். பிறகு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர், தமிழ்நாடு, வேலூர் மாவட்டம், சைதாப்பேட்டையைச் சேர்ந்த பாஸ்கரன் (46) என்பதும், அவரிடம் ரூ.1 லட்சம் கள்ளநோட்டுகள் இருப்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அய்யனூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (48) என்பவரின் வீட்டில் கள்ளநோட்டுகள் அச்சடித்து அவற்றை மகாராஷ்டிரா, அசாம், குஜராத், கேரளா போன்ற மாநிலங்களுக்குச் சென்று புழக்கத்தில் விட்டு வருவதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து, மகாராஷ்டிர குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் படேல் தலைமையிலான காவல் துறையினர் தமிழகம் வந்தனர். பிறகு தமிழக காவல் துறையினர் உதவியோடு மகாராஷ்டிர காவல் துறையினர் இன்று (மார்ச் 9) காலை ஆம்பூர் அடுத்த அய்யனூர் கிராமத்துக்கு வந்தனர்.
சரவணன் வீட்டுக்குள் இரு மாநிலக் காவல் துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். இதைக் கண்ட சரவணன் பதற்றமடைந்தார். சரவணன் வீட்டில் இருந்த கள்ளநோட்டு அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்த கலர் ஜெராக்ஸ் இயந்திரம், ரூபாய் நோட்டுகளைக் கட்டுப்போடும் பேப்பர், ரூபாய் நோட்டுகளை வரிசைப்படுத்தி அதை வெட்டும் கருவி, கலர் மை மற்றும் கள்ள நோட்டு 7 லட்சத்து 55 ஆயிரத்து 700 ரூபாய் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
பிறகு, கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட சரவணன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த மகாராஷ்டிர காவல் துறையினர் 2 பேரையும் கைது செய்து மகாராஷ்டிராவுக்கு அழைத்துச் சென்றனர். மேலும், இந்த வழக்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தவும் மகாராஷ்டிர காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
ஆம்பூர் அருகே வீட்டில் கள்ளநோட்டு அச்சடித்து அவற்றை பல்வேறு மாநிலங்களில் புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.