

புளியரை சோதனைச் சாவடியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மினி லாரியில் மக்காச்சோள கதிர்களுக்கு அடியில் மறைத்து வைத்து நூதன முறையில் கேரள மாநிலத்துக்கு புகையிலைப் பொருட்களை கடத்திச் சென்ற 3 பேரை புளியரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்டம், புளியரை வழியாக கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி, கனிமவளங்கள் கடத்திச் செல்லப்படுவதாகவும், கேரள மாநிலத்தில் இருந்து இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகள் தமிழகத்துக்கு கொண்டுவந்து, சாலையோரங்களில் கொட்டப்படுவதாகவும் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று புளியரை சோதனைச் சாவடியில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கேரளா நோக்கிச் சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.
அந்த லாரியில் பிளாஸ்டிக் பெட்டிகளில் மக்காச்சோளக் கதிர்கள் வைக்கப்பட்டிருந்தன. சந்தேகத்தின்பேரில், லாரியில் இருந்த மக்காச்சோள கதிர்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளை வெளியே எடுத்தபோது, லாரியின் உள் பகுதியில் அட்டைப் பெட்டிகளும், மூட்டைகளும் இருந்தது தெரியவந்தது. அவற்றில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ரூ.15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை மினி லாரியுடன் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
லாரியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் கேரள மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்த தில்ஷா (31), அல் அமீன் (32), முஹமது நசிம் (38) என்பது தெரியவந்தது.
இவர்கள், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து புகையிலைப் பொருட்களை கொண்டுவந்ததாகக் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.