

சென்னை தேனாம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் தொடர்புடைய 4 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
சென்னை மாநகரின் இதயப் பகுதியாக இருக்கும் அண்ணாசாலையில் அண்ணா மேம்பாலம் அருகே அமெரிக்க துணை தூதரகம், காமராஜர் அரங்கம், செம்மொழிப் பூங்கா ஆகியன உள்ளன.
கடந்த 3-ம் தேதி அண்ணா சாலையில் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு சிலர் தப்பிச் சென்றனர். ஆனால், அந்த வெடிகுண்டு கார் மீது படவில்லை. பிரபல தாதாவைக் கொல்ல சினிமா பாணியில் நடந்த முயற்சி இதுவென்பது பின்னர் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், பைக்கில் வந்த இளைஞர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பியது அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் நேற்று வெளியாகின. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேனாம்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த வழக்கில் போலீஸார் தேடி வந்த சென்னை தண்டையார்பேட்டை ஜான் என்ற ஜான்சன் (25), எஸ்.கமருதீன் (30), ராஜசேகர் (28), பிரசாந்த் (25) ஆகியோர் இன்று மாலை மதுரை 6-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
அவர்கள் 4 பேரையும் மார்ச் 11-ம் தேதி வரை மதுரை சிறையில் அடைக்க நீதிபதி முத்துராமன் உத்தரவிட்டார்.