

சிவகங்கை அருகே இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை அருகே இலுப்பகுடியில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையம் உள்ளது. இங்கு வீரர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு எல்லை பாதுகாப்புப் பணிக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த மையத்தில் இன்று மாலை பாதுகாப்பு பணியில் இருந்த உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பகவந்த் சிங் மகன் சங்கர் சிங் (38) திடீரென துப்பாக்கியால் தலையில் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு மனஅழுத்தம் காரணமா? வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள், பூவந்தி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இரு தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் இந்தியன் வங்கியில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப்படைக் காவலர் யோகேஸ்வரன் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து காவலர்கள் தற்கொலை செய்து கொள்வது காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.