

புதுச்சேரி மதுபானங்களைக் கடத்தி அதில் தமிழக அரசின் லேபிளை ஒட்டி கள்ளச்சந்தையில் விற்பனைக்கு அனுப்பிய 10 பேர் செஞ்சி அருகே கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு மதுபானங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் விழுப்புர மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா தலைமையிலான போலீஸார் இன்று காலையில் மேல்மலையனூர் அருகே வளத்தியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக அடுத்தடுத்து வந்த 3 கார்களில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 3,688 மதுபாட்டில்கள், 3 கார்கள், கார்களுக்குப் பாதுகாப்பாகப் பின் தொடர்ந்து வந்த 3 பைக்குகளைப் பறிமுதல் செய்து காரில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வளத்தி அருகே முருகந்தாங்கல் கிராமத்தில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான ஷெட்டில் புதுச்சேரி கலால் லேபிள்களுக்குப் பதில் தமிழக அரசின் லேபிள்களை ஒட்டி கள்ளச்சந்தையில் விற்பனைக்கு அனுப்புவது தெரியவந்தது.
இதையடுத்து சென்னை, கொடுங்கையூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (38), காரைக்கால் பாண்டியன் (36), ரஞ்சித் (22) , ஷாகுல் அமீது (19), கடலூர் ஆனந்தராஜ் (23), சென்னை, ஜாபர்கான்பேட்டை பாலு (53), வளத்தி அஜீத்குமார் (24), வேலாங்கண்ணன்(28), மதன்(25), மணி மகன் அஜீத்குமார் (24) ஆகிய 10 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போலீஸ் விசாரணையில் லேபிள் ஒட்டுவது மட்டும்தான் தற்போது தெரியவந்துள்ளது. மதுபாட்டில்கள் எப்படி எங்கிருந்து கிடைக்கின்றன என்பது விரைவில் தெரியவரும்.