

கோவில்பட்டியில் ஆர்த்தி மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நேற்று காலை தொடங்கிய சோதனை இன்று (மார்ச் 4) அதிகாலை 3 மணி வரையிலும் நீடித்தது.சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
கோவில்பட்டி ஆர்த்தி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜன். இவரது மனைவி மருத்துவர் கோமதி தலைமையில் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது.
கோவில்பட்டியில் ஆர்த்தி மருத்துவமனைக்கு உட்பட்ட ஆர்த்தி ஸ்கேன் மையம் மற்றும் ஆர்த்தி திருமண மண்டபம் ஆகியவை இயங்கி வருகின்றன.
மேலும், கோவில்பட்டி, திருநெல்வேலி, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் ஆர்த்தி ஸ்கேன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று காலை சுமார் 11 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் 19 பேர் கொண்ட குழுவினர் 3 கார்களில் ஆர்த்தி மருத்துவமனைக்கு வந்தனர்.
அவர்கள் பல குழுக்களாகப் பிரிந்து ஆர்த்தி மருத்துவமனைகள், ஸ்கேன் மையம், திருமண மண்டபம், ரத்த வங்கி ஆகியவற்றில் சோதனை நடத்தினர்.
மேலும், அங்குள்ள ஆவணங்களின் அடிப்படையில் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 10 மணியை கடந்தும் நீடித்தது.
ஆனால் மருத்துவமனைக்கு பரிசோதனை செய்ய வந்த நோயாளிகள் யாரையும் அதிகாரிகள் தடுக்கவில்லை. ஸ்கேன் மையமும் வழக்கம்போல் இயங்கியது.
இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. சோதனையின் முடிவில் தான் முழு தகவலும் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.