

திருநெல்வேலியிலுள்ள ஊறுகாய் நிறுவனம் மற்றும் பாளையங்கோட்டையிலுள்ள இனிப்பகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
திருநெல்வேலி அருகே நரசிங்கநல்லூரில் தனியார் ஊறுகாய் நிறுவனம் செயல்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரியும் இந்நிறுவனத்திலிருந்து தயாரிக்கப்படும் பல்வேறு வகையான ஊறுகாய் பாட்டில்கள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.
இந்நிலையில் இந்த ஊறுகாய் நிறுவனத்தில் நேற்று மாலையில் தொடங்கி இன்று அதிகாலை வரையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அத்துடன் ஊறுகாய் நிறுவன உரிமையாளரின் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அதிகாலை வரையில் நடைபெற்ற இந்த சோதனையில் பல ஆவணங்கள் சிக்கியதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து பாளையங்கோட்டையிலுள்ள பிரபல ஸ்வீட் ஸ்டால்களிலும் சென்னையிலிருந்து வந்திருந்த வருமான வரித்துறையினர் நேற்று மாலையில் சோதனை நடத்தினர். இந்த ஸ்வீட்ஸ் ஸ்டால்களின் உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.