

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் இந்தியன் வங்கியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் யோகேஸ்வரன் தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவம் வங்கியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள அரட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன். இவர், கடந்த 2013-ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக, திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் காவலராகப் பணியாற்றி வந்தார். இந்தியன் வங்கியில் உள்ள பாதுகாவலர்களுக்கான அறையில் தங்கியும் வந்தார்.
இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) காலை கழிவறையில் எஸ்எல்ஆர் எனப்படும் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கித் தோட்டா வெடிக்கும் சத்தம் கேட்டு வந்த சக ஊழியர்கள் யோகேஸ்வரன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் போலீஸார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து திருப்பத்தூர் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.