

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடுப்பட்டியில் மட்டுப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
உசிலம்பட்டி, தொட்டப்பநாயக்கனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட செட்டியப்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் பால் பண்ணை நடத்தி வருகிறார். நேற்றிரவு இவரது பண்ணையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பண்ணையில் தீ மளமளவெனப் பரவ தீயில் கருகி 40 பசு மாடுகள் உயிரிழந்தன. பசுமாடுகள் அனைத்தும் கட்டிவைக்கப்பட்டிருந்ததால் அவற்றால் தப்பிக்க இயலவில்லை.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் மாட்டுப் பண்ணையில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 40 மாடுகளும் பலியாகின.மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். உசிலம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.