

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சொத்துப் பிரச்சனை காரணமாக காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளித்த நபர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வேண்டுராயபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தையா என்பவரது மகன் ஜோதிமுருகன் (47).
ஜோதிமுருகனின் தந்தை கந்தையா பூர்வீகச் சொத்துக்கள் அனைத்தையும் மகள் லட்சுமி பெயரில் எழுதி வைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் குடும்பத்தில் பிரச்சினை இருந்து வந்த நிலையில் சொத்துப் பிரச்சனை குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 22 -ம் தேதி மல்லி காவல் நிலையத்தில் ஜோதிமுருகன் புகார் கொடுத்துள்ளார்.
காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று மாலை திடீரென மல்லி காவல் நிலையம் முன்பு ஜோதி முருகன் தான் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தன் உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அவரது உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில் அருகில் இருந்த பொதுமக்கள் தீயை அனைத்து படுகாயமடைந்த ஜோதி மணியை சிவகாசி அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.காவல் நிலையம் முன்பு சொத்துப் பிரச்சினை காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி ஒருவர் தீ வைத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், ஜோதி முருகன் தாமாக தீ வைத்துக் கொண்டிருக்க மாட்டார், எதிர்தரப்பினரே தீ வைத்திருக்க வேண்டும். இதற்குப் போலீஸாரும் உடந்தை எனக் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.