

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பொதுமக்களை ரஜினி பார்க்கச்சென்றபோது நீங்கள் யார் என்று ரஜினியை கேட்ட இளைஞர் மோட்டார் பைக் திருட்டில் கைதானதாக செய்தி வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க தூத்துக்குடிக்குச் சென்றார். அப்போது மருத்துவமானையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் யார் நீங்கள் என ரஜினியைக் கேட்க அது சமூக வலைதளங்களில் வைரலானது. சந்தோஷ் என்கிற அந்த இளைஞர்தான் ரஜினியிடம் அப்படி கேட்டவர்.
அதன் பின்னர் அதே கோபத்தில் வந்த ரஜினி சென்னை விமான நிலையத்தில் கோபப்பட்டார். இந்த நிகழ்வுக்குப்பின் அந்த இளைஞரை அனைவரும் மறந்துபோயினர். இந்நிலையில் மோட்டார் பைக் திருட்டு வழக்கில் அந்த இளைஞர் கைதாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடியில் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் பைக்கினை திருடியதாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் சந்தோஷும் ஒருவர் என தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வசிப்பவர் ராம்குமார் (23). இவர் இரண்டு நாட்களுக்கு முன் தனது மோட்டார் சைக்கிளை தனது வீட்டு முன்பு நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்த போது நிறுத்தி வைத்திருந்த பைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வடபாகம் போலீஸில் அவர் புகார் அளித்தார்.
வடபாகம் போலீஸார் இதுகுறித்து நடத்திய விசாரணையில், துாத்துக்குடி, பண்டாரம் பட்டியை சேர்ந்த சந்தோஷ்(23), கால்டுவெல் காலனியைச் சேர்ந்த மணி(23), ஆசிரியர் காலனியை சேர்ந்த சரவணன்(22), ஆகியோர் பைக் திருட்டில் சம்பந்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார் திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சந்தோஷும் ஒருவர் என்பதால் சமூக வலைதளத்தில் இந்த தகவல் வேகமாக வைரலாகிறது.
இதுகுறித்து விசாரித்தபோது மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. சந்தோஷ் ஒரு மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என தனக்கு தெரிந்த மெக்கானிக்கிடம் சொல்லி வைத்திருந்ததாகவும், அவர் கேட்ட மோட்டார் சைக்கிள் வந்துள்ளதாக மெக்கானி கூற அதைப் பார்த்து விலை கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதை அவர் ஓட்டிச் செல்லும்போது வாகனச்சோதனையில் போலீஸார் ஆவணங்களை சோதிக்க அது திருடப்பட்ட பைக் என தெரிய வந்ததில் குற்றவாளிகளுடன் சேர்த்து பைக்கை விலை கொடுத்து வாங்கிய சந்தோஷையும் சேர்த்து கைது செய்ததாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.