

சென்னை ஓட்டேரியில் வாகனச் சோதனையின்போது ஹெல்மட் அணியாமல் வந்த இளைஞருடன் நடந்த வாக்குவாதத்தில் தடியால் தலையில் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்திய டிராபிக் சார்ஜண்ட் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்று டிஜிபி, போக்குவரத்து கூடுதல் ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 18-ம் தேதி ஓட்டேரியில் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் என்பவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக இஎஸ்ஐ காலனியைச் சேர்ந்த சுரேந்தர்(19) என்பவர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணியாமல் சென்றுள்ளார். அவரை மடக்கிய எஸ்.ஐ.ரமேஷ் ஹெல்மட் அணியாமல் சென்றதற்கான அபராதம் கட்ட சொல்ல இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ரமேஷ் இளைஞர் சுரேந்தரை தடியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் சுரேந்தர் தலையிலிருந்து ரத்தம் வழிவதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அவரை பிடித்து கேட்டுள்ளனர்.பலரும் அதை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். பொதுமக்கள் ரமேஷ்மீது நடவடிக்கை எடுக்க கோரி முற்றுகையிட்டுள்ளனர்.
அப்போது அங்கு வந்த ஆய்வாளர் வள்ளி அவரை மீட்டு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் இது சம்பந்தமாக சமரசம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக தமிழ் நாளிதழ்களில் வந்த செய்தியின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் துரை ஜெயச்சந்திரன், தாக்குதல் நடத்திய சிறப்பு உதவி ஆய்வாளர் மீது எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக டிஜிபி, போக்குவரத்து துறை கூடுதல் ஆணையர் ஆகியோர் 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
அவரது நோட்டீஸில், உதவி ஆய்வாளர் ரமேஷ் இளைஞர் சுரேந்தரை தாக்கியதன்மூலம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டாரா?
சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மீது உயர் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன?
வருங்காலங்களில் இதுபோன்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
இவைகள் குறித்து 2 வார காலத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.