Last Updated : 21 Feb, 2020 04:59 PM

 

Published : 21 Feb 2020 04:59 PM
Last Updated : 21 Feb 2020 04:59 PM

காவல்துறைக்கு சொந்தமான 2.1 ஏக்கர் நிலம் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை: சுரண்டையில் 7 பேர் கைது

தென்காசி மாவட்டம் சுரண்டையில் காவல்துறைக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் உட்பட மேலும் சிலர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை, அயன் சுரண்டை பகுதியில் சங்கரன்கோவில் பிரதான சாலை அருகே காவல்துறைக்குச் சொந்தமான 2.1 ஏக்கர் நிலம் உள்ளது.

சர்வே எண் 635-2ல் உள்ள இந்த நிலம் புறம்போக்கு நிலமாக இருந்தது. பின்னர், கடந்த 2004-ம் ஆண்டு வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் அலுவலக உத்தரவின்படி காவல்துறைக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலத்தில் காவலர் குடியிருப்பு கட்ட முடிவு செய்யப்பட்டது. காவல்துறை சார்பில் அறிவிப்பு விளம்பரமும் வைக்கப்பட்டது. ஆனால், கட்டிடம் ஒதுவும் கட்டாமல் இந்த நிலம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடந்தது. காவல்துறை வைத்த அறிவிப்பு விளம்பரத்தையும் மர்ம நபர்கள் அப்புறப்படுத்திவிட்டனர். இப்பகுதியில், ஒரு சென்ட் நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.20 லட்சம் முதல் 30 லட்சம் வரை உள்ளது.

இந்நிலையில், ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய பாண்டியன் என்ற சுப்பையா பாண்டியன் என்பவர், வாசுதேவநல்லூர் சார்பதிவாளர் அலுவலகம் மூலம் இந்த நிலத்துக்கான போலியான பொது அதிகார ஆவணம் தயார் செய்து, வீரகேரளம்புதூர் தாலுகா இடையர்தவணையைச் சேர்ந்த ஆயநம்பி என்பவருக்கு வழங்கியுள்ளார்.

அதனைப் பயன்படுத்தி, சிவகிரி சார்பதிவாளர் அலுவலகம் மூலம் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆயநம்பி தனது மகன் சிவசக்தி என்பவர் பெயருக்கு 50 சென்ட் நிலத்தை 95 ஆயிரத்து 432 ரூபாய்க்கு கிரையம் செய்து, போலி பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து, சுரண்டை பகுதி 1 கிராம நிர்வாக அலுவலர் பாலு சுரண்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சுப்பையா பாண்டியன், ஆயநம்பி, அவரது மகன் சிவசக்தி, வாசுதேவநல்லூர் சார்பதிவாளர் அலுவலக ஊழியர் ராஜேந்திரன், கடையநல்லூரைச் சேர்ந்த நாராயணசாமி, மங்களாபுரத்தைச் சேர்ந்த சமுத்திரம், சிவகிரி சார்பதிவாளர் அலுவலக ஊழியர் மனோகரன், லாலாகுடியிருப்பைச் சேர்ந்த வேல்சாமி, தேவிப்பட்டணத்தைச் சேர்ந்த தங்கராஜ், சுரண்டையைச் சேர்ந்த பூபதி பெருமாள், அச்சன்புதூரைச் சேர்ந்த ஆவண எழுத்தர் ராமகிருஷ்ணன், இடையர்தவணையைச் சேர்ந்த ராஜகோபால், நயினாகரத்தைச் சேர்ந்த முருகேஷ்குமார் உள்ளிட்ட சிலர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 465, 467,468, 471, 420 ஆகிய பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இவர்களில், சுப்பையா பாண்டியன், ஆயநம்பி, சிவசக்தி, ராமகிருஷ்ணன், முருகேஷ்குமார், பூபதி பெருமாள், ராஜகோபால் ஆகிய 7 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள காவல்துறைக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x