நெல்லை: பித்தளை வாளால் கேக் வெட்ட முயற்சி; போலீஸில் சிக்கினார் தனுஷ் ரசிகர்

இடது- ஜெகமே தந்திரம் பட போஸ்டரில் தனுஷ்; வலது- தனுஷ் ரசிகர் கொண்டுவந்த வாளை பறிமுதல் செய்து செல்லும் காவலர்.
இடது- ஜெகமே தந்திரம் பட போஸ்டரில் தனுஷ்; வலது- தனுஷ் ரசிகர் கொண்டுவந்த வாளை பறிமுதல் செய்து செல்லும் காவலர்.
Updated on
1 min read

நெல்லையில் சினிமா திரையரங்குக்கு வரவிருந்த நடிகர் தனுஷை வரவேற்கும் விதமாக ஏற்பாடு செய்திருந்த கேக் வெட்டும் நிகழ்ச்சிக்கு ரசிகர் ஒருவர் பித்தளை வாள் கொண்டுவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலியில் உள்ள ஒரு திரையரங்கில், நடிகர் தனுஷ் நடிக்கும் 40-வது திரைப்படமான ஜெகமே தந்திரத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று மாலையில் நடைபெற்றது.

இதற்காக, நடிகர் தனுஷ் வாளுடன் நிற்பது போன்ற விளம்பரத்தையும் தனுஷ் ரசிகர்கள் வெளியிட்டனர்.

விழாவில் நடிகர் கலந்து கொள்வதாகக் கூறப்பட்டது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரசிகர்கள் வந்தனர். ஆனால் தனுஷ் வரவில்லை. இதையடுத்து, ரசிகர்கள் கேக் வெட்ட ஏற்பாடு செய்தனர்.

கேக் வெட்டுவதற்காக ஒரு ரசிகர் வாள் வைத்திருந்ததை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் பார்த்தனர். இதையடுத்து, அவரைப் பிடித்து, விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில் அவர், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவருடைய பெயர் சுள்ளான் செந்தில் என்பதும் தெரியவந்தது. பித்தளை வாள் பறிமுதல் செய்யப்பட்டது. தனுஷ் ரசிகரை போலீஸார் அழைத்துச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in