

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வேனில் ரேஷன் அரிசி கடத்திய மதுரையைச் சேர்ந்த 2 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ, போலீஸார், அருப்புக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் ரமணன் உள்ளிட்டோர் கூட்டாக இணைந்து அருப்புக்கோட்டை பகுதியில் இன்று காலை தகவலின் பேரில் திடீர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பந்தல்குடி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரிய வந்தது.
இது தொடர்பாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனில் ரேஷன் அரிசி கடத்தி வந்த மதுரை காமராஜர் புரத்தைச் சேர்ந்த முனியசாமி (35) என்பவரையும் வேன் ஓட்டுனர் அதே பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் (37) என்பவரையும் கைது செய்தனர்.
மேலும், வேனில் கடத்தி வரப்பட்ட 570 சிப்பங்களில் இருந்த 2,280 கிலோ ரேஷன் அரிசியையும் கடத்தலுக்குப் பயன்படுத்திய வேனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.