

சென்னை, ஆயிரம் விளக்குப் பகுதியில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த தம்பதி தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த நிலையில் சிலிண்டர் கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டதில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் , 24 பர்கனா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனில் சர்தார் (54) இவரது மனைவி கிருஷ்ண சர்தார்(48). தம்பதி இருவரும் சிகிச்சைக்காக நேற்று அதிகாலை 5-30 மணிக்கு சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளனர். ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலை, குலாம் அப்பாஸ் அலிகான் தெருவில் உள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளனர்.
மனைவி கிருஷ்ண சர்தார் காலை 7.30 மணி அளவில் விடுதியில் உள்ள அறையில் சமையல் செய்வதற்காக சிலிண்டரைப் பற்ற வைக்கும் போது கேஸ் கசிந்தது தெரியாமல் பற்ற வைக்க சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்ததால் தீ அறை முழுதும் பற்றி எரிந்ததில் மனைவி சிக்கிக்கொண்டார். அவரை கணவர் காப்பாற்ற முயல இருவரும் தீயில் சிக்கி கருகினர்.
தீயின் வெப்பம் தாங்காமல் இருவரும் அலறி துடிக்க ரூம் பாய் சொர்கா ஜித் நாயக் என்பவர் தீயை அணைத்துள்ளார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டுச்செல்ல அங்கு சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வந்த இருவரும் இன்று காலை உயிரிழந்தனர். இந்த விபத்துக்குறித்து ஆயிரம் விளக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனைக்கு இந்தியா முழுதுமிருந்து மருத்துவச் சிகிச்சைக்காக நோயாளிகள் உறவினர்களுடன் வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவிக்கையில், “ இங்கு மாதக்கணக்கில் தங்கி சிகிச்சை எடுக்கும் அவர்கள் விடுதிகளில் அறை எடுத்து தங்கினால் அதிக செலவாகும் சாப்பாட்டுக்கு தனியாக செலவழிக்க வேண்டும் என்பதால் மருத்துவமனைக்கு எதிரே இதுபோன்று ஆயிரக்கணக்கில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை நம்பி சமையலறையுடன் கூடிய தங்கும் விடுதிகளை மாத, வார, தின வாடகைக்கு விடுகின்றனர்.
இவ்வாறு இருக்கும் நூற்றுக்கணக்கான விடுதிகள் எவ்வித அனுமதி, முறையான பராமரிப்பு பாதுகாப்பு உபகரணங்கள், உரிமம் இல்லாமல் இயங்குகின்றன. பல வீடுகள் அறை, அறையாக பிரிக்கப்பட்டு சமையல் பாத்திரம், கேஸ் சிலிண்டர், அடுப்புடன் வாடகைக்கு விடப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனித்து, ஆய்வு செய்து முறைப்படுத்தவேண்டும்”. எனக்கேட்டுக்கொண்டார்.