

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அ.சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் மீது போலீஸார் திடீரென வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளால் வலுவாக நடத்தப்பட்டு வருகிறது. கேரளா, மேற்கு வங்கம், புதுவை உள்ளிட்ட பல மாநிலங்கள் இதை எதிர்த்து வருகின்றன.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்கள் போலீஸ் அனுமதியுடன் மட்டுமே நடத்தப்படவேண்டும் என சட்டப்பிரிவு 41-ன் கீழ் சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ஆனால், போராட்டத்துக்கு அனுமதி கோரினால் காவல்துறை தரப்பில் மறுக்கப்படுவதால் அதை மீறி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. சிஏஏவுக்கு எதிராக பேரணி, ஆளுநர் மாளிகை முற்றுகை, ஆர்ப்பாட்டம், மனிதச்சங்கிலி என பல வடிவங்களில் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த மாதம் 30-ம் தேதி மாலை அனுமதியின்றி சென்னை அண்ணா சாலையில் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் சிஐடியூ பொதுச்செயலாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவுமான அ.சவுந்தரராஜன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகி ஷெரீஃப், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி இஸ்மாயில் மற்றும் இஸ்லாமிய இயக்க நிர்வாகிகள் சலீம், ஹனீஃபா ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் மீது சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் 7(1)a CLA ACT -1932 & 41(iv) CP act ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேற்கண்ட நபர்கள் ஜன. 30-ம் தேதி அன்று மாலை 4:30 மணி அளவில் அரசு அனுமதி பெறாமல், சிஏஏவுக்கு எதிராக முத்துசாமி பாலத்திலிருந்து அண்ணா சாலை வழியாக ஜி.பி.சாலை வரை பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தியது சம்பந்தமாக அவர்கள் மீது இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று 2018-ம் ஆண்டு அளித்த பேட்டிக்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
2018-ம் ஆண்டு அக்.10-ல் கிண்டி காமராஜர் நினைவு மண்டபத்தில் பேட்டி அளித்தபோது அரசுக்கு எதிராகவும், வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாகவும் சீமான் மீது கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.