

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கல்லூரி மாணவி காதலிக்க மறுத்ததால் இளைஞர் ஒருவர் பேருந்து நிலையத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் அருண்குமார் (26). இவர், அதே ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அப்பெண் காதலிக்க மறுத்து கடந்த ஓராண்டுக்கு முன் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர், ஊர் பெரியவர்களை அருண்குமாரை கண்டித்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், குறிப்பிட்ட மாணவி வழக்கம்போல் இன்று காலை சிவகாசியில் உள்ள கல்லூரிக்குச் செல்வதற்காக ராஜபாளையம் பேருந்து நிலையத்திற்கு வந்தார்.
அப்போது அங்கு வந்த அருண்குமார், தன்னை திருணம் செய்துகொள்ளுமாறு கூறி கல்லூரி மாணவியை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதற்கு, கல்லூரி மாணவி மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார் தான் கேனில் கொண்டுவந்த பெட்ரோலை உடலில் ஊற்றித் தீக்குளித்தார். அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீரை உடலில் ஊற்றித் தீயை அணைத்தனர். பின்னர்.
ஆம்புலென்ஸ் மூலம் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அருண்குமார் அனுப்பிவைக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு 60 சதவிகித தீக்காயங்களுடன் அருண்குமார் தீவிர சிகிச்சைபெற்று வருகிறார்.
இதுகுறித்து சேத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.