Published : 08 Feb 2020 08:40 PM
Last Updated : 08 Feb 2020 08:40 PM

தொலைத் தொடர்பு கருவிகள் வாங்கியதில் முறைகேடு;  14 காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு: லஞ்ச ஒழிப்பு போலீஸார் தகவல்

காவல்துறைக்கு சிசிடிவி உள்ளிட்ட தொலை தொடர்பு கருவிகள் வாங்கிய விவகாரத்தில் முறைகேடு புகார் எழுந்ததை அடுத்து டெக்னிக்கல் பிரிவில் பணியாற்றிய எஸ்பி, டிஎஸ்பி வீடு உள்ளிட்ட 18 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழக காவல் துறைக்கு ரேடியோ, வயர்லஸ் கருவிகள், டிஜிட்டல் மொபைல் போன்கள் போன்ற தொலைத்தொடர்பு தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து நவீன கருவிகள் வாங்குவதற்கான பணிகளை தமிழக காவல் துறையின் தொழில்நுட்ப சேவை பிரிவு மேற்கொண்டு வருகிறது.

புதிய கருவிகளை வாங்க பல்வேறு நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், டெண்டர் நடைமுறையில் ஊழல் நடந்திருப் பதாக தமிழக அரசுக்கு புகார்கள் வந்தன.

திமுக தலைவர் ஸ்டாலின், காவல்துறைக்கான நவீன கருவிகள் கொள்முதலில் 350 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இதை முதல்வர் பழனிசாமி மறுத்திருந்தார். இந்நிலையில் உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவின் பேரில் தமிழக டிஜிபி திரிபாதி, கடந்த ஆண்டு 19-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டார்.

தமிழக காவல் துறையின் தொழில்நுட்ப பிரிவில் உள்ள முக்கிய அதிகாரி உட்பட ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கும், தற்போது பதவியில் இருக்கும் உயர் காவல் அதிகாரிகளுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டும் அதிகமான டெண்டர்கள் கொடுக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 16 மாவட்ட காவல் துறைக்கு உபகரணங்கள் வாங்க விடப் பட்ட டெண்டரில் 10 மாவட்டங்களுக்கான டெண்டர் ஒரே நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகுதியுள்ள பல நிறுவனங்கள் டெண்டர் கோரிய நிலையில் காவல் துறை உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டும் அதிக டெண்டர்கள் ஒதுக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த டெண்டர் விவகாரம் தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கும் டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட காலக்கட்டத்தில் பணியாற்றிய எஸ்பி அன்புச்செழியன், ரமேஷ் மற்றும் கூடுதல் எஸ்பி , டிஎஸ்பி உள்ளிட்ட பலர் சம்பந்தப்பட்ட 18-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ கடந்த 2016-ம் ஆண்டுமுதல் 2018 ஆண்டு காலகட்டத்தில் காவல்துறைக்கு தேவையான தொலை தொடர்பு கருவிகள், சிசிடிவி கேமராக்கள், சிசிடிவி கேமராவுக்கான உபகரணங்கள், ஜிபிஎஸ் கருவிகள், டாப்லட் கம்ப்யூட்டர்கள், மொபைல்கள், பேட்டரிகள் கொள்முதல் செய்ததில் எஸ்பி அன்புச்செழியன் உள்ளிட்ட டெக்னிக்கல் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகள் ஆதாயம் அடைந்துள்ளனர். இதனால் அரசுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நடத்தப்பட்ட விரிவான விசாரணையில் 14 காவல் அதிகாரிகள் மற்றும் இரண்டு நிறுவனங்கள் மீது குற்றம் நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதை அடுத்து நேற்று (பிப்.07) அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று அவர்கள் சம்பந்தப்பட்ட வீடு, அலுவலகங்களில் விரிவான சோதனை நடத்தப்பட்டது.

இந்த விரிவான சோதனையில் சில முக்கிய ஆவணங்கள், தடயங்கள் சிக்கியது”. இவ்வாறு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

88 கோடி ரூபாய் முறைகேடு : வாக்கி-டாக்கி விவகாரத்தில் நடந்தது என்ன?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x