

பரமக்குடியில் இளைஞர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
பரமக்குடி அருகேயுள்ள தண்டராதேவி பட்டணத்தைச் சேர்ந்த மங்களநாதன் மகன் கார்த்திக்(24). இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பரமக்குடி காக்காத்தோப்பு பகுதியில் உள்ள மது பாரில் முதியவர் ஒருவரைத் தாக்கிப் பணம் பறித்த வழக்கில் பரமக்குடி தாலுகா போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதனையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு கார்த்திக் பிணையில் வெளியே வந்தார். இந்நிலையில், பரமக்குடி காக்காத்தோப்பு அருகே உரப்புளி கண்மாய் பகுதியில் இன்று அதிகாலை இளைஞர் கார்த்திக் கல்லால் தலை நசுக்கப்பட்டும், பீர் பாட்டில்களால் தாக்கியும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது போலீஸாருக்கு தெரிய வந்தது.
பரமக்குடி டிஎஸ்பி சங்கர், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீஸார் கார்த்திக் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ராமநாதபுரம் மண்டல தடயவியல் துறை உதவி இயக்குநர் மினிதா சம்பவ இடத்தில் தடயவியல் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கைரேகை நிபுணர்களும், போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ராஜராஜன், கொலை நடந்த இடத்தை பார்வையிட்டார். இக்கொலை தொடர்பாக பரமக்குடி தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் ஒருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.