

சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபட்ட 16 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரேஸுக்குப் பயன்படுத்திய 7 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் மோட்டார் சைக்கிள் ரேஸில் ஈடுபடுவது அதிகமாக உள்ளது. பெரிய இடத்துப் பிள்ளைகள் ஒருகாலத்தில் பைக் ரேஸில் ஈடுபடுவது என்ற நிலை மாறி இன்றுள்ள நிலையில் நடுத்தர மற்றும் சாதாரண நிலையில் உள்ள குடும்பத்து இளைஞர்களும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுபோன்று மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடும் இளைஞர்களால் விபத்துகள் ஏற்படுவதும், அதில் அவர்கள் உயிரிழப்பதும், காயமடைவதும், சில நேரம் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் இவர்களால் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. பண்டிகை காலங்கள், புத்தாண்டு உள்ளிட்ட காலங்களில் இரவில், அதிகாலையில் இவ்வாறு சாலையில் ரேஸ் போவது, கும்பலாக கூடி வேகமாக வாகனங்களை இயக்குவது வழக்கமாக உள்ளது.
இதைத் தடுக்க போலீஸார் சாலைத் தடுப்புகளை அமைத்தும், வாகனச் சோதனையில் ஈடுபட்டும் பலரையும் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் பிப்.7 நள்ளிரவு 2 மணி அளவில் கும்பலாக மோட்டார் சைக்கிளில் ஏராளமான இளைஞர்கள் ஒன்று கூடினர்.
பின்னர் அனைவரும் பைக் ரேஸில் ஈடுபட்டனர். அதிவேகமாக பெசன்ட் சாலை வழியாக மலர் மருத்துவமனை, அடையாறு வழியாக பைக் ரேஸில் சென்றனர். இதுகுறித்த தகவல் சாஸ்த்ரி நகர் போலீஸாருக்குச் சென்றது. சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த போலீஸார் காலை 6 மணி அளவில் அத்தனை பேரையும் பிடித்துக் கைது செய்தனர்.
அனைவரும் அயனாவரம், பெரம்பூர், வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர்கள். மோட்டார் சைக்கிள் ரேஸில் ஈடுபட்ட சிலரைப் பிடித்த போலீஸார் அவரவர் அளித்த தகவலின் பேரில் 16 இளைஞர்களைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர்கள் பைக் ரேஸில் பயன்படுத்திய 7 விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
கைதானவர்கள் விவரம்: 1. அருண் (18), 2. மணிகண்டன் (24), 3. சந்தோஷ்குமார் (20), 4. வசந்த் (22), 5. தமிழரசன் (18), 6. சஞ்சய் (18), 7. ஜோஷிதரன் (18), 8. ஜோஷ்வா (19), 9. பரத் (19), 10. பிரசாந்த் (18), 11. ராஜ்குமார் (18), 12. புவனேஷ் (19), 13. சந்தோஷ் (20), 14. சரண் (19), 15. பிரவீன்குமார் (19), 16. சரத்குமார் (20).
போக்குவரத்துக்கு இடையூறாக வாகனம் ஓட்டுவது, ரேஷ் ட்ரைவிங், ஆபத்தை விளைவிக்கும்வண்ணம் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 16 பேர் மீது J5 சாஸ்திரிநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்களை அழைத்து போலீஸார் அறிவுரை வழங்கினர். ''சாதாரண வருமானத்தில் இருக்கும் நீங்கள் பிள்ளைகள் ஆசைப்படுகிறார்கள் என்று தவணை முறையில் லோன் போட்டு ரூ.1.5 லட்சம், 2 லட்சத்துக்கு வாகனங்களை வாங்கித் தருகிறீர்கள். ஆனால், நீங்கள் பாசம் வைக்கும் மகன் இதுபோன்று ஆபத்தைத் தேடிக்கொள்வதை நீங்கள் கவனிக்காமல் இருந்தால் எப்படி சரியாக இருக்கும்?
உங்கள் பிள்ளைகளைக் கண்காணியுங்கள், அவர்கள் நண்பர்களைக் கண்காணியுங்கள். ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுங்கள். முக்கியமாக ஹெல்மட் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது என்பதைக் கடைப்பிடிக்கச் சொல்லுங்கள். நள்ளிரவில் இப்படி பிள்ளைகளை வெளியே சுற்றவிடலாமா?'' என போலீஸார் கூறி, அவர்களை அனுப்பி வைத்தனர்.