

வேடசந்தூர் அருகே சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துவ்கொலை செய்யப்ப்பட்ட வழக்கில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறியக் கோரி திண்டுக்கல் மகிளா நீதிமன்ற நீதிபதியிடம் முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி புகார் மனு அளித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 6 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டநிலையில் டிராக்டரில் இருந்து தவறிவிழுந்து இறந்ததாகக் கூம்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை போலீஸார் கைது செய்தனர். சிறுமி பாலியல் வழக்கில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று இரவு முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி திண்டுக்கல்லில் மறியலில் ஈடுபட்டார்.
இந்நிலையில் இன்று திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி, மாவட்டச்செயலாளர் சச்சிதானந்தம் மற்றும் ஜனநாயக மாதர் சங்க மாவட்டச்செயலாளர் ராணி, மாநிலக்குழு உறுப்பினர் வனஜா உள்ளிட்டோர் மகிளா நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமனிடம் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேடசந்தூர் அருகே ரெங்கநாதபுரத்தை சேர்ந்த 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்தக் குழந்தை டிராக்டரில் இருந்து கீழே விழுந்து இறந்ததாகப் போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளனர்.
இது பொய்யான தகவல் அறிக்கை. உண்மை குற்றவாளிகளைக் கண்டறிந்து போலீஸார் கைது செய்யவேண்டும். இந்த வழக்கிற்கு தொடர்பில்லாத இரண்டு சிறுவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
இந்த இருவரும் உண்மைக் குற்றவாளியின் தோட்டத்தில் வேலை செய்பவரின் மகன்கள். உண்மைக் குற்றவாளியான உமாசேகர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மகிளா நீதிபதியிடம் மனுகொடுத்துள்ளோம்.
இதுவரை 15 சிறுமிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற வழக்குகளில் ஆளுங்கட்சியினர் குற்றவாளிகளைப் பாதுகாக்கின்றனர்.
உண்மைக் குற்றவாளிகளை போலீஸார் தங்கள் முதுகிற்குப் பின்னால் பாதுகாக்கக்கூடாது. எங்கள் புகார் மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். எஸ்.பி.,யிடம் பேசுவதாக கூறியுள்ளார், என்றார்.