Last Updated : 04 Feb, 2020 01:58 PM

 

Published : 04 Feb 2020 01:58 PM
Last Updated : 04 Feb 2020 01:58 PM

தென்காசியில் பள்ளி மாணவர்கள் மோதல்: கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் ஒரு மாணவர் சக மாணவரை கத்தியால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வீராணத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில். இவரது மகன் ஷாருக்கான் (17). இவர், வீரகேரளம்புதூரில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார். ஷாருக்கானுக்கும், அதே பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவருக்கும் நேற்று பள்ளியில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த மாணவரும் வீராணத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில், இன்று காலையில் ஷாருக்கான் பேருந்தில் வீரகேரளம்புதூருக்கு சென்றார். பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது, அங்கு வந்த அந்த மாணவர், ஷாருக்கானுடன் மீண்டும் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் அதிகரித்ததால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷாருக்கானை கழுத்து, கையில் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ஷாருக்கான், தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக, கத்தியால் வெட்டியதாகக் கூறப்படும் மாணவரைப் பிடித்து வீரகேரளம்புதூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பள்ளி அருகிலும், மாணவரின் ஊரான வீராணத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x