

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு சிறுவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த மில் தொழிலாளியின் 6 வயது மகள், அங்குள்ள அரசுப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்துவந்தார்.
இவர், நேற்று மாலை விளையாடிவிட்டு வருவதாக கூறிச்சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. பெற்றோர் தேடிச்சென்றதில் ஊருக்கு வெளியேயுள்ள தனியார் தோட்டத்தில் காயங்களுடன் இறந்துகிடந்தார். தகவலறிந்த கூம்பூர் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
போலீஸார் விசாரணையில் சிறுமி தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது ரங்கநாதபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மூத்த மகன் (வயது 16, 11-ம் வகுப்பு படித்துவருகிறார்.) சிறுமியை தோட்டத்தின் மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
அதன் பின்னர் அச்சிறுமி முனியாண்டியின் இளைய மகன் (வயது 14, இவர் 9 ம் வகுப்பு படித்துவருகிறார்) மற்றும் இன்னும் சில சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது முனியாண்டியின் இளைய மகன் தோட்டத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிராக்டரை இயக்கியதில் சிறுமி தவறிவிழுந்து இறந்தது தெரிய வந்துள்ளது. சிறுமியை முனியாண்டியின் மூத்தமகன் ஏற்கெனவே ஒரு முறை பாலியல் வன்கொடுமை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இரண்டு சிறுவர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கூம்பூர் போலீஸார் கைது செய்தனர். மேலும் தோட்டத்தில் இருந்த டிராக்டரை ஓட்ட தகுதியில்லாத நபரை அனுமதித்ததற்காக உமா சேகரையும் போலீஸார் கைது செய்தனர்.