Last Updated : 03 Feb, 2020 05:33 PM

 

Published : 03 Feb 2020 05:33 PM
Last Updated : 03 Feb 2020 05:33 PM

புதுச்சேரி அமைச்சரின் ஆதரவாளர் கொலை: 3 பேர் கைது; போலீஸாரிடம் பிடிபடும்போது இருவரின் கை முறிந்தது

புதுச்சேரியில் அமைச்சரின் ஆதரவாளரைக் கொன்றவர்களை போலீஸார் துரத்திச் சென்றபோது தப்புவதற்காக பாலத்திலிருந்து கீழே குதித்தபோது இருவர் கை முறிந்த நிலையில் போலீஸாரிடம் பிடிபட்டனர். இச்சம்பவத்தில் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளரும் காங்கிரஸ் பிரமுகரான சாம்பசிவம் கடந்த 31-ம் தேதி கிருமாம்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.

இக்கொலையில் பிள்ளையார் குப்பத்தைச் சேர்ந்த அமுதன், கூடப்பாக்கம் அன்பழகன், சார்லி, மணிமாறன், ஜெகன், கவியரசு ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகித்தனர். இதையடுத்து, சின்ன கரையாம்புத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த அவர்களை இன்று போலீஸார் பிடிக்க முயன்றனர். அவர்களை போலீஸார் விரட்டிச் சென்றனர்.

இதில் தேடப்பட்டு வந்த அமுதன், அன்பழகன் ஆகியோர் அங்கிருந்த பாலத்திலிருந்து குதித்து தப்ப முயன்றனர். இதில் தவறி விழுந்த அவர்களின் உடலில் காயம் ஏற்பட்டது. அதையடுத்து அவர்களை போலீஸார் பிடித்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நாகூரைச் சேர்ந்த பாக்கியராஜையும் பிடித்தனர். பாக்கியராஜ், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தவர்.

கீழே விழுந்ததால் கை முறிந்த நிலையில் இருந்த அமுதன், அன்பழகன் இருவரையும் போலீஸார் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்..

சாம்பசிவத்தைக் கொன்றது தொடர்பாக போலீஸாரிடம் அமுதன் வாக்குமூலம் அளித்தார். "சாம்பசிவத்தின் மாமா வீரப்பன் எனக்கு ஊரில் தொல்லை கொடுத்து வந்தார். அதனால் அவரைக் கொலை செய்தேன். அதன்பிறகு சாம்பசிவம் இடையூறாக இருந்தார். அவர் என்னைப் பழிவாங்க திட்டமிட்ட தகவல்கள் அவர் தரப்பிலிருந்து வந்தது. அதையடுத்து திட்டமிட்டு சாம்பசிவத்தைக் கொன்றேன்" என்று அமுதன் வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x